திருமானூரில் 155 மி.மீ. மழை: வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி


திருமானூரில் ஒரேநாளில் 155 மி.மீ. மழை பெய்ததால் வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது. இதில் திருமானூர் பகுதியில் 155 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் திருமானூரில் உள்ள காந்திநகர், திடீர் குப்பம், ரத்தின பிள்ளை காலனி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

முழங்கால் அளவிற்கு மழைநீர் சென்றதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

திருமானூர் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை மற்றும் முறையான வடிகால் வசதி இல்லாததால் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்காத வகையில் வடிகால் வசதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story