தொழில் அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகை கொள்ளை
கோவையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை
கோவையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.17 லட்சம் நகையை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழில் அதிபர்
கோவை விளாங்குறிச்சி குமுதம் நகரை சேர்ந்தவர் மாய கண்ணன் (வயது 57), தொழில் அதிபர். இவருடைய மனைவி செல்வநாயகி (53). இந்த நிலையில் மாய கண்ணன் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் தொண்டாமுத்தூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவர்களின் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென்று மாய கண்ணன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உங்கள் வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக கூறினார். உடனே அவர் தனது வீட்டுக்கு சென்றபோது முன்கதவு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
ரூ.17 லட்சம் நகைகொள்ளை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கீழே சிதறி கிடந்தன. அதுபோன்று வீட்டில் உள்ள பொருட்கள் வைக்கும் அறையில் இருந்த அனைத்து பொருட்களும் கீழே கிடந்தன.
அதில் இருந்த 40 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்கள், 12 கை கடிகாரம், ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.17 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் மற்றும் கைவிரல் ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.பின்னர் அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அத்துடன் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, மாயகண்ணன் வீட்டில் 2 கைரேகை கிடைத்து உள்ளது. அதை வைத்து பார்க்கும்போது 2 நபர்கள்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம். எனவே தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.