2 வீடுகளில் நகை-பணம் திருட்டு
மேல்மலையனூர், சின்னசேலம் பகுதியில் 2 வீடுகளில் நகை-பணம் திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்
மேல்மலையனூர் அருகே உள்ள நெகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன். விவசாயி. இவர், குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த 11½ பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சின்னசேலம் அருகே பூண்டி கிராம எல்லையில் வசித்து வரும் நல்லம்மாள் (வயது 65) என்பவரது வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 1 பவுன் நகையை திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.