மின்சார ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது
ஆந்திர மாநிலத்தில் இருந்து மின்சார ரெயிலில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தமிழக-ஆந்திர எல்லை பகுதி ஆகும். இந்த வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தொடர்ந்து மோட்டார் சைக்கிள், பஸ்கள் உள்பட இதர வாகனங்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. இத்தகைய போதை பொருட்களை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் சோதனைசாவடி மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வேட்டை நடத்தி பலரை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர், சூலூர்பேட்டை பகுதிகளில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி செல்லும் மின்சார ரெயில்கள் மூலமாகவும் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தலைமையில் ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி வந்த மின்சார ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரெயில் மூலம் சென்னைக்கு கடத்த முயன்ற 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்சார ரெயிலில் கஞ்சா கடத்திய மதுரை இந்திரா நகரை சேர்ந்த கர்ணன் (வயது 38), ஒடிசாவை சேர்ந்த சபன் குமார் சாகு (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் போலீசார் கைப்பற்றினர்.