வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற 2 சிறுவர்கள் கைது


வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற 2 சிறுவர்கள் கைது
x
தினத்தந்தி 4 Oct 2023 2:45 AM IST (Updated: 4 Oct 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை பீளமேட்டில் வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்


கோவை பீளமேட்டில் வாலிபரை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்ற 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் சார்பில் கூறப்பட்டதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

கோவை சரவணம்பட்டி சங்கரப்பன் தோட்டத்தை சேர்ந்தவர் அமின் (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் காளப்பட்டியில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் காளப்பட்டி மோகன் நகர் 5-வது தெருவில் சென்ற போது 2 சிறுவர்கள் அவரை வழிமறித்தனர்.

பின்னர் அவர்கள் அமினிடம் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டினர். அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி அமினின் சட்டைப்பையில் இருந்த பணத்தை எடுக்க முயன்றனர்.

அரிவாள் வெட்டு

இதனால் அதிர்ச்சியடைந்த அமின் அவர்களை கீழே தள்ளி விட்டு, அந்த வழியாக சென்ற சிலர் உதவியுடன், 2 பேரையும் மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால், அவர்கள் அமினை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் தலை உள்ளிட்ட இடங்களில் அமினுக்கு காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசில் அமின் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அமினை அரிவாளால் வெட்டி பணம் பறிக்க முயன்றது சரவணம்பட்டி மற்றும் காளப்பட்டியை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


Related Tags :
Next Story