பாம்பன் பாலத்தில் 2 அரசு பஸ்கள் மோதல்
பாம்பன் பாலத்தில் 2 அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
ராமேசுவரம்,
பாம்பன் பாலத்தில் 2 அரசு பஸ்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பஸ்கள் மோதல்
ராமேசுவரத்தில் இருந்து மதுரையை நோக்கி நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன், அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. கடல் நடுவே உள்ள பாம்பன் பாலத்தில் வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ்சை டிரைவர் வீரக்குமார் ஓட்டினார். இந்த பஸ் முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே ராமேசுவரம் நோக்கி மற்றொரு அரசு பஸ் சென்றது. எதிர்பாராதவிதமாக 2 பஸ்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன.
இதில் 2 அரசு பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் நொறுங்கின. இருபஸ்களின் பயணிகளும் அலறினர்.
பஸ்கள் உடனடியாக பாம்பன் பாலத்தில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் தப்பினர். அவற்றின் பின்னால் வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக பாலத்தின் இருபுறமும் நீண்ட வரிசையில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டன.
பயணிகள் தப்பினர்
தகவல் அறிந்ததும் போலீசார், அதிகாரிகள் விரைந்து வந்தனர். பஸ்கள் மோதியதில், பயணிகளுக்கும், கண்டக்டர், டிரைவர்களுக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. இந்த விபத்து குறித்து பாம்பன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் போக்குவரத்து சீரானது.