நகைக்கடையில் 2 கிலோ தங்க கட்டி மோசடி: நகைப்பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு


நகைக்கடையில் 2 கிலோ தங்க கட்டி மோசடி: நகைப்பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
x

சென்னையில் பிரபல நகைக்கடையில் 2 கிலோ தங்க கட்டிகளை நகை செய்வதாக வாங்கி மோசடி செய்ததாக நகைப்பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் பிரபல ஜி.ஆர்.டி. நகைக்கடை உள்ளது. இந்த கடையின் மக்கள் தொடர்பு அதிகாரி சத்யநாராயணன் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சென்னை நந்தனம் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த பிரபீர் ஷேக் (32) என்பவர் நகைப்பட்டறை வைத்துள்ளார். இவரது நகைப்பட்டறையில் நாங்கள் வழக்கமாக தங்க கட்டிகளை கொடுத்து நகைகளை செய்து வாங்குவோம். அவ்வாறு நகைகள் செய்வதற்காக கொடுக்கப்பட்ட தங்க கட்டிகளை முறையாக நகை செய்து தராமல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

சுமார் 2 கிலோ 46 கிராம் எடை உள்ள தங்க கட்டிகளை இவர் மோசடி செய்துவிட்டார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புகார் மனு மீது மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை முடிவில் பிரபீர் ஷேக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே இவர் மீதும், இவரது பங்குதாரர் பாலமுருகன் என்பவர் மீதும் ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை மோசடி செய்துவிட்டதாக கடந்த மார்ச் மாதம் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story