மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கடலூர் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடலூர்
கொலை
கடலூர் தாழங்குடா ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவர் சாந்தி. இவருடைய கணவர் மதியழகன் கடந்த 27-6-2023 அன்று மஞ்சக்குப்பம் சண்முகம்பிள்ளை தெருவில் உள்ள சிவன்கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தார். தொடர்ந்து அவர் சிறிது தூரம் அந்த தெருவில் நடந்து சென்ற போது, அவரை உள்ளாட்சி தேர்தல் முன்விரோத தகராறில் ஒரு கும்பல் துரத்திச்சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது.
இது பற்றி கடலூர் புதுநகர் போலீசில் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி கொடுத்த புகாரின் பேரில், இந்த கொலையில் தொடர்புடைய மாசிலாமணி, பிரகலாதன், தினேஷ், ஆறுமுகம், பாரதி, குருநாதன், வத்சலா, ராமலிங்கம், தாழங்குடா வேல்டுவிஷன் தெரு கோபி மகன் விஜய் (வயது 26), மாரியம்மன் கோவில் தெரு ராமலிங்கம் மகன் சஞ்சய்குமார் (40) உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டத்தில் கைது
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய விஜய், சஞ்சய்குமார் ஆகியோரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில், அவர்கள் 2 பேரையும் கடலூர் புதுநகர் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவர்களிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.
ஏற்கனவே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மாசிலாமணி, பிரகலாதன், தினேஷ், அறிவு என்கிற ஆறுமுகம் ஆகிய 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.