கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு மேலும் 2 வாகனங்கள் வந்தன


கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு மேலும் 2 வாகனங்கள் வந்தன
x
தினத்தந்தி 21 Oct 2022 3:51 AM IST (Updated: 21 Oct 2022 10:29 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு மேலும் 2 வாகனங்கள் வந்தன.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவுக்காக மேலும் 2 வாகனங்கள் திருப்பதி கோலிலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன.

வெங்கடாசலபதி கோவில்

திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் வெங்கடேசபெருமாள் எழுந்தருளியுள்ளார். இதுதவிர பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருட பகவான் சன்னதி ஆகிய சன்னதிகளும் தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன.

இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

பிரம்மோற்சவ விழா

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வரும் பக்தர்கள், இந்த கோவிலிலும் திருப்பதியை போன்று பிரம்மோற்சவ திருவிழா நடத்த வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி பிரம்மோற்சவ திருவிழாவின் போது 10 நாட்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலை சுற்றி வெங்கடாசலபதிசாமி பவனி வருவதற்காக 12 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

மேலும் 2 வாகனங்கள்

இந்த விழாவுக்காக திருப்பதியில் உள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 7 தலைநாகம் கொண்ட பெரிய சேஷ வாகனம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் ஆகிய 3 புதிய வாகனங்கள் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் 5 தலைநாகம் கொண்ட சிறிய சேஷ வாகனம், சிம்ம வாகனம் ஆகிய என மேலும் 2 புதிய வாகனங்கள் திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இருந்து கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மீதி உள்ள வாகனங்கள் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழாவும், அதற்கு முன்பாக வரும் நவம்பர் மாதம் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவ திருவிழாவும், தொடர்ந்து சீனிவாசத் திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட உள்ளது.


Next Story