சோழிங்கநல்லூரில் வழிப்பறி செய்த 2 பேர் கைது
சோழிங்கநல்லூரில் வழிப்பறியில் ஈடுப்பட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் சோழிங்கநல்லூர் கே.கே.சாலையில் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோது அவரை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வழிமறித்து கத்தி முனையில் ரூ. 3 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து ராமச்சந்திரன் செம்மஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கண்காணிப்பு கேமரா பதிவை அடிப்படையாக கொண்டு செம்மஞ்சேரியில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 19), வெட்டுவாங்கேனி பகுதியை சேர்ந்த கவுதம் (21) என்பது தெரியவந்தது. ஆனந்த் மீது கொலை மற்றும் வழிப்பறி வழக்கு உள்ளது. கவுதம் மீது கொள்ளை வழக்கு உள்ளது. அவர்களிடமிருந்து 2 விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், கத்தி, செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.