திண்டிவனத்தில் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில்மணப்பெண் வீட்டில் நகை கொள்ளையடித்த 2 பேர் கைதுமேலும் 3 இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்


திண்டிவனத்தில் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில்மணப்பெண் வீட்டில் நகை கொள்ளையடித்த 2 பேர் கைதுமேலும் 3 இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், மணப்பெண் வீட்டில் நகை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் 3 இடங்களில் கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் ரவி (வயது 55). தனியார் பஸ் ஊழியர். இவருடைய மனைவி சித்ரா(50). இவர்களது மகள் பச்சையம்மாள். இவருக்கு நாளை(ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான நகைகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் திருமணத்துக்கான புதிய ஆடைகள் எடுப்பதற்காக சித்ரா தனது அக்காள் ஞானசவுந்தரி மற்றும் உறவினர்களுடன் கடந்த 13-ந்தேதி சென்னைக்கு சென்றார். இதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மர்ம மனிதர்கள் வீட்டு கதவுபூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை, அதேபகுதியில் உள்ள ஞானசவுந்தரியின் வீட்டிலும் ¾ பவுன் நகை, 10 ஆயிரத்து 500 ரூபாயையும் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

இதேபோன்று அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் லேப்டாப், செல்போன் ஒன்றும் திருடுபோனது. இதுகுறித்ததனித்தனி புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் சிக்கினர்

அதில், வானூர் தாலுகா எறையூர் பகுதியை சேர்ந்த பூபாலன் மகன் முருகன் (வயது 23), அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் சாரம் பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் சித்ரா, ஞானசவுந்தரி மற்றும் ஓட்டலில் அவர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் 2 இடங்கள்

இதேபோன்று, வெள்ளிமேடு பேட்டை வடசிறுவலூர் பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் (54) என்பவரது வீட்டில் 3 கிராம் தாலி செயின், வெள்ளி சாவிக்கொத்து, பாத்திரங்களையும், நெய் குப்பி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் (61) என்பவரது விவசாய மின் இணைப்பில் 145 மீட்டர் தாமிர கம்பிகளையும் திருடிய சம்பவத்தில் அவர்கள் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகன், 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story