மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது
மதுரையில் ஒரே தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை சிந்தாமணி விநாயகர் தெரு கண்ணன் காலனியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் விருதுநகரில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். வழக்கம் போல் வேலைக்குச்சென்று திரும்பியவர் இரவு வீட்டின் முன்பாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார்.
பின்னர் அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் சண்முககுமார் (36), அப்பளம் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து அவரும் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். ஒரே தெருவில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை செய்தனர். அதில் சிந்தாமணி கண்ணன் காலனியை சேர்ந்த கருப்பசாமி (37), பாலமுருகன் (26) ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.