கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது
கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளை சம்பவங்கள்
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் அரியலூர், கீழப்பழுவூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக ஆளில்லாத வீடுகளில் தொடர் கொள்ளை மற்றும் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் 3 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் அரியலூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
விசாரணையில், அவர்களில் ஒருவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கொளக்குடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பதும், மற்றொருவர் சிவகாசியை சேர்ந்த முனியாண்டி ராஜா என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர்கள் ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் 39 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும், அவர்களை கடலூர் மாவட்ட போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததும், அதன் பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியே வந்ததும் தெரியவந்தது. அதன் பின்னர் இவர்கள் அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக மாவட்டம் முழுவதும் ஆளில்லாத பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்தது மற்றும் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
நகைகள் மீட்பு
இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.28 லட்சம் மதிப்புள்ள 70 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. மேலும் அவர்கள் 60 பவுன் நகைகளை சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். அந்த நிறுவனம் இதுபோன்று பல்வேறு திருட்டு நகைகளை தொடர்ந்து வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அட்டிகா கோல்டு கம்பெனி மீது அரியலூர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.