தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது


தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது
x

தாசில்தார் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட என்.எச்.2, பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52), இவர் வண்டலூர் தாசில்தாராக தற்போது பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 16-ந்தேதி குடும்பத்துடன் வீட்டு சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பழனிக்கு சென்றிருந்தார்.

பின்னர் பழனியில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 8 பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.34 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மறைமலைநகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகள் அடிப்படையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இதற்கு இடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டாங்கொளத்தூர் பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை அந்த வழியாக சென்ற ரோந்து போலீசார் விசாரித்த போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுடலை மணி (வயது 50), தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி என்கிற பாலகிருஷ்ணன் (39), என்பதும், இவர்கள் இருவரும் மறைமலைநகரில் உள்ள தாசில்தார் ராஜேந்திரன் வீட்டில் நகை, பணம், வெள்ளிப் பொருட்களை திருடி கொண்டு பஸ் ஏறி சொந்த ஊருக்கு செல்வதற்காக நின்று கொண்டிருப்பதை ஒப்புக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து திருடிய நகை, பணம், வெள்ளிப் பொருட்களை அவர்களிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.


Next Story