தனியாக செல்பவர்களை மிரட்டி செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது


தனியாக செல்பவர்களை மிரட்டி செல்போன் பறித்த வழக்கில் 2 பேர் கைது
x

தனியாக செல்பவர்களை மிரட்டி செல்போன் பறித்த வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் தனியாக நடந்து செல்லக்கூடியவர்களை கத்தி முனையில் மிரட்டி பணம் மற்றும் செல்போன்களை பறித்து செல்வதாக அடிக்கடி மணிமங்கலம் போலீசாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி, மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் மணிமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட படப்பை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் இருந்து தப்பிச்செல்ல முயன்றனர். விசாரணையில் அவர்கள் ஆரம்பாக்கம் பாரதிநகர் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 26), அலெக்ஸ் (25) என்பது தெரியவந்தது. தப்பிச்செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் அலெக்சுக்கு கை முறிவும் பாலாஜிக்கு கால் எலும்பு முறிவும் ஏற்பட்டது. மேலும் அவர்கள் ஆரம்பாக்கம் பகுதியில் தனியாக செல்லக்கூடியவர்களை கத்தி முனையில் மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். கை முறிவு ஏற்பட்ட அலெக்ஸ், கால் எலும்பு முறிவு ஏற்பட்ட பாலாஜி இருவரும் சிகிச்சைக்கு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 பட்டாகத்திகள், 2 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.


Next Story