தேசிய தொழில்நுட்ப கல்லூரி காவலாளி உள்பட 2 பேர் சாவு


தேசிய தொழில்நுட்ப கல்லூரி காவலாளி உள்பட 2 பேர் சாவு
x

தேசிய தொழில்நுட்ப கல்லூரி காவலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

திருச்சி

முசிறி அருகே உள்ள ஆமூர் கல்யாணசுந்தரம் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 48). இவர் திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் ேநற்று முன்தினம் வேலைக்காக ஸ்கூட்டரில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் துடையூர் அருகே சென்றபோது, திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சமயபுரம் அருகே உள்ள வி.துறையூரை சேர்ந்த நாகராஜின் மகன் புருஷோத்தமன்(34). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நம்பர் ஒன் டோல்கேட்டை அடுத்துள்ள கூத்தூர் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story