மேட்டூர், தேவூர் பகுதிகளில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி-விநாயகர் சிலைகளை கரைக்க வந்த போது பரிதாபம்
மேட்டூர்,தேவூர் பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வந்த இடத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலியானார்கள்.
தனியார் நிறுவன மேலாளர்
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா வெண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பாரதி (வயது 25). இவர், பி.காம். சி.ஏ. முடித்து விட்டு வெண்டனூரில் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.
பாரதி மற்றும் வெண்டனூர் பகுதியை சேர்ந்த 9 பேர் கிராமத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர். அதனை கல்வடங்கம் காவிரி ஆற்றில் கரைக்க நேற்று எடுத்து சென்றனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கொட்டாயூர் வழியாக அரசு அனுமதி இல்லாத ஆத்துக்காடு காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைத்துள்ளனர்.
ஆற்றில் மூழ்கி பலி
அப்போது நீச்சல் தெரியாத பாரதியை தண்ணீர் இழுத்துசென்றது. அவர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு பாரதி உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்கு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த பாரதியின் தாய் கூலி தொழிலாளி. தம்பி வல்லரசு கோபி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சகோதரி எழிலரசிக்கு திருமணம் ஆகி விட்டது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர்
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரன் (27), எலக்ட்ரீசியன். இவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலைகளை கரைக்க மேட்டூர் காவிரி ஆற்றுக்கு வந்தார். அங்கு சிலைகளை கரைத்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது மேட்டூர் அனல் மின் நிலையம் அருகில் உள்ள அணையின் உபரிநீர் செல்லும் பாதையில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது வீரன் திடீரென தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர்கள் கருமலைக்கூடல், மேட்டூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வீரன் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சோகம்
ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேவூர் பகுதியில் குறும்படம் எடுக்க சென்ற 2 கல்லூரி மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சோகம் அடங்குவதற்குள் நேற்று தேவூர், மேட்டூர் பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற 2 பேர் பலியான சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.