வெவ்வேறு விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி
மூங்கில்துறைப்பட்டு, கச்சிராயப்பாளையம் பகுதியில் நடந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் இறந்தனர்.
மூங்கில்துறைப்பட்டு,
திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கன்னி பகுதியை சேர்ந்தவர் அருள் மனைவி ரேவதி (வயது 35). இவர் நேற்று மதியம் மொபட்டில் மூங்கில்துறைப்பட்டு தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக ரேவதியின் மொபட் மீது மோதியது. இதில் ரேவதி மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக கரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் சக்கரத்தில் ரேவதி சிக்கினார். இதில் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரேவதி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் மூங்கில்துறைப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் அருகே அக்கராயப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் அஜித் (20). இவர் கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அஜித் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அஜித் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.