சங்கிலி பறிக்க முயன்றவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சங்கிலி பறிக்க முயன்றவர் உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்
திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதிநகர் உய்யகொண்டான் வாய்க்கால்கரை அருகே நடந்து சென்ற தனியார் மருத்துவமனை பெண் ஊழியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் தங்கச்சங்கிலி பறிக்க முயன்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இது குறித்து, கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசார் விசாரணையில், சங்கர் மீது கரூர் மாவட்டம் தாந்தோணிமலை போலீஸ் நிலைய எல்லையில் ஸ்கூட்டரில் வந்த பெண் ஒருவரிடம் தங்க சங்கிலி பறித்ததாக ஒரு வழக்கும், துணிக்கடை ஊழியரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக ஒரு வழக்கும் என 2 வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. எனவே சங்கர் தொடர்ச்சியாக குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் வழங்கப்பட்டது.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இதேபோல் திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த கமால்(வயது 41) என்பவர் கடந்த மாதம் ராம்ஜிநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர் விசாரணையில் அவர் தொடர்ந்து கஞ்சா விற்கும் எண்ணம் கொண்டவர் என்பது தெரியவந்தது. இதனால் போலீசாரின் பரிந்துரையின் பேரில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார்.