உளுந்தூர்பேட்டை மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்
பொதுமக்களை அழைக்கழிப்பதாக எழுந்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை மின்வாரிய பொறியாளர் உள்பட 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் புகார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் மின் இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் பொதுமக்களை அலைக்கழித்ததாகவும், தேவையில்லாத ஆவணங்களை கேட்பதாகவும் சேலம் மின் பகிர்மான அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் மின்வாரிய உயர் அதிகாரிகள் நேற்று உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் இளமின் பொறியாளர் எழிலரசன் மற்றும் மின் வாரிய ஊழியர் தணிகைநாதன் ஆகியோர் பொதுமக்களை அழைக்கழித்ததுடன், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளையும் மதிக்காமல் செயல்பட்டதும் தெரியவந்தது.
2 பேர் பணியிடை நீக்கம்
இதையடுத்து கள்ளக்குறிச்சி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி எழிலரசன், தணிகைநாதன் ஆகிய 2 பேரையும் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.