குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு
x

குண்டர் சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம்

ஈரோடு மாவட்டம் ஈரோடு தாலுகா பி.பி. அக்ராஹாரம், ராஜா செட்டியார் வீதியை சேர்ந்தவர் வாகித் (25), சுண்ணாம்பு ஓடை வீரப்பன்புதூர் அஞ்சல், சிலோன் காலனியை சேர்ந்தவர் அலாவுதீன் (27). சகோதரர்களான இவர்கள் இருவரும் கூட்டாக தமிழ் சினிமா நடிகர் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி, அவரது பெயரிலேயே முகநூலில் போலி கணக்கு உருவாக்கி உள்ளனர்.

அதன்மூலம் காஞ்சீபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்புக்காக அழைப்பு அனுப்பி அதை அந்த பெண் ஏற்றவுடன், அவருடன் நன்றாக பேசி பழகி அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணை பெற்று வாட்ஸ் அப் மூலமாக தகவல்களை பரிமாறி உள்ளனர்.

மேலும் வீடியோ கால் பேசி அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த பெண் பணம் தர மறுத்ததால் அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பகிர போவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து ரூ.2 லட்சத்திற்கும் மேலாக பணத்தை ஜிபே மூலமாக அனுப்பி உள்ளார்.

தொடர்ந்து மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் அந்த பெண் ஆன்லைன் மூலமாக காஞ்சீபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கொண்ட மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.


Next Story