குடோனில் புகுந்து டீ தூள் பாக்கெட்டுகளை திருடிய 2 பேர் கைது
மதுரையில் குடோனில் புகுந்து டீ தூள் பாக்கெட்டுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டீ தூள் பாக்கெட்டுகள் திருட்டு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பந்தல்குடி மேட்டுப்பட்டி தெருவை சேர்ந்தவர் சேவியர் அந்தோணி ராஜசேகர் (வயது 68). இவர் மதுரை பழைய நத்தம் ரோட்டில் தனியார் நிறுவன ஏஜென்சியின் குடோனில் 13 ஆண்டுகளாக பொறுப்பாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வழக்கம்போல் இரவு குடோனை பூட்டி விட்டுச் சென்றார். மறுநாள் வந்து அவர் பார்த்தார்.
அப்போது அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது. அதனால் சந்தேகம் அடைந்த அவர் குடோனில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைத்திருந்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டீ தூள், காபி தூள் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
2 பேர் கைது
இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் டீ தூள் பாக்கெட்டுகளை நிறுவனத்தில் வேலை பார்த்த முன்னாள் ஊழியரும் கிருஷ்ணாபுரம் காலனியை சேர்ந்த தேன்பாலமுருகன் (23) மற்றும் அய்யர்பங்களா காவேரி தெருவை சேர்ந்த ஹரிகரன் (19) என்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.