வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை- ரூ.1¾ லட்சத்தை திருடிய 2 பேர் கைது
கந்தர்வகோட்டை இருகே வீட்டின் கதவை உடைத்து 12 பவுன் நகை-ரூ.1¾ லட்சத்தை திருடி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகை-பணம் திருட்டு
கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு (வயது 41). இவர், கடந்த ஜூலை மாதம் 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு பட்டுக்கோட்டை அருகில் உள்ள வனசவயல் கிராமத்தில் கிராம செவிலியராக பணியாற்றும் இவரது மனைவி வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சின்னராசுவின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 500-ஐ திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாகன சோதனை
இந்நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் ேபாலீசார் கந்தர்வகோட்டை-செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். மேலும் அவர்களிடம் 11¾ பவுன் நகையும் இருந்தது. இதுகுறித்தும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தச்சங்குறிச்சியில் உள்ள சின்னராசுவின் வீட்டின் கதவை உடைத்து நகை-பணத்தை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
2 பேர் கைது
மேலும் அவர்கள் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை ஆதி தெரு பாளையம் பகுதியை சேர்ந்த சோமு மகன் நீலகண்டன் (34), பட்டுக்கோட்டை ஓடக்கரை பகுதியை சேர்ந்த கருப்பன் மகன் ராஜேந்திரன் (60) என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், 11¾ பவுன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.