நகை பறிப்பு, திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


நகை பறிப்பு, திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 Oct 2023 5:15 AM IST (Updated: 6 Oct 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாநகர பகுதியில் நகை பறிப்பு, திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோயம்புத்தூர்

கோவை மாநகர பகுதியில் நகை பறிப்பு, திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 தனிப்படை

கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் காட்டூர், சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, நகை பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடந்தன.

இதில் ஈடுபட்டவர்களை பிடிக்க துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் 150-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

2 பேர் கைது

அதில் 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 23), பார்த்திபன் (22) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் 2 பேரும் கோவையில் கத்தியை காட்டி மிரட்டி 3 பேரிடம் நகை பறித்தது, பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காதது, வழிப்பறியில் ஈடுபட்டது, மோட்டார் சைக்கிள் திருட்டு உள்பட 7 வழக்குகள் அவர்கள் மீது இருப்பது தெரியவந்தது.

ரூ.8 லட்சம் பொருட்கள் பறிமுதல்

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை, லேப்டாப், 2 இருசக்கர வாகனங்கள் உள்பட ரூ.8 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக துணை கமிஷனர் சந்தீஷ் நிருபர்களிடம் கூறும்போது, கைதான 2 பேர் மீது விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியில் தங்கி இருந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ரூ.55 லட்சத்தில் 110 அதிநவீன கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ரூ.30 லட்சத்தில் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன என்றார்.


Related Tags :
Next Story