தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு


தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு
x

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள தீனதயாளன் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டை உடைத்து 16 பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துணிகர திருட்டு சம்பவம் தொடர்பாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தியின் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து மற்றும் மகாலிங்கம் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். அதில் திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டின் பின்புறம் உள்ள ஏரிகரை வழியாக மர்ம ஆசாமிகள் தப்பி ஓடியிருப்பதும் மோப்ப நாய் நிக்கி மூலம் போலீசார் கண்டறிந்து உள்ளனர்.

இந்த நிலையில், இந்த திருட்டு தொடர்பாக சம்பவத்தன்று இரவு அப்பகுதியில் நடமாடிய புதிய நபர்கள் யார்? யார்? அவர்களை பற்றிய தகவல்கள் மற்றும் அப்பகுதியில் பதிவாகி உள்ள செல்போன் சிக்னல்கள் எவை? குடியிருப்பு பகுதியையொட்டிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சி விவரங்கள் என தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் பழைய குற்றவாளிகளையும் பட்டியலிட்டு அவர்களுக்கும் இந்த திருட்டு சம்பவத்திற்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா? என்கிற விசாரணையையும் போலீசார் முடுக்கி விட்டு உள்ளனர்.


Next Story