அரசு பஸ்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கக்கூடாது; நெல்லை அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு


அரசு பஸ்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கக்கூடாது; நெல்லை அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு
x

அரசு பஸ்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு நெல்லை அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது.

திருநெல்வேலி

அரசு பஸ்களில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்கக்கூடாது என்று கண்டக்டர்களுக்கு நெல்லை அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டு உள்ளது.

ரூ.2 ஆயிரம் நோட்டு

இதுதொடர்பாக நெல்லை அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 19-ந்தேதி அறிக்கையில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறும் முடிவை அறிவித்து உள்ளது. இருப்பினும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் சட்டப்பூர்வமான டெண்டராக இருக்கும், மேலும் வருகிற செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

ஒரு நாளைக்கு ஒரு நபர் அதிகப்பட்சமாக ரூ.20 ஆயிரம் வரை வங்கியில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்றிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை முதல்...

இதையொட்டி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அரசு போக்குவரத்து கழகத்தால் வங்கியில் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கண்டக்டர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பக்குவமாக எடுத்துக்கூறி, பயணிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் டிக்கெட் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இதுதொடர்பாக பொது மேலாளர்கள், அனைத்து கிளை மேலாளர்கள் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும்.

மேலும் தினசரி ஒவ்வொரு கிளையிலும் கண்டக்டர்களால் செலுத்தப்பட்ட வசூல் தொகையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எண்ணிக்கை குறித்த விவரங்களை மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Related Tags :
Next Story