போலீஸ்காரரின் தாய் உள்பட 2 பெண்கள் குத்திக்கொலை
சிவகாசியில், பட்டப்பகலில், போலீஸ்காரரின் தாய் உள்பட 2 பெண்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட உறவினர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
சிவகாசி,
சிவகாசியில், பட்டப்பகலில், போலீஸ்காரரின் தாய் உள்பட 2 பெண்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட உறவினர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
வாரிசு வேலை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் டிரைவராக வேலை செய்தவர் ரவி. இவருக்கு ரதிலட்சுமி என்ற மனைவியும், ராகுல் உள்ளிட்ட 3 குழந்தைகளும் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட ரவி திடீரென உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது மனைவி ரதிலட்சுமி தனது கணவரின் வாரிசு வேலைக்கு விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு மாமியார் முருகேசுவரி (வயது 50) எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரதிலட்சுமிக்கு வேலை கிடைத்தால் அவர் குழந்தைகளை சரியான முறையில் கவனிக்க முடியாது என்றும், பேரன் ராகுல் படித்து முடித்த பின்னர் அவனுக்குத்தான் வாரிசு வேலை கொடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் முருகேசுவரிக்கும், ரதிலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம்
இதையடுத்து இருவரையும் சமாதானம் செய்ய ரதிலட்சுமியின் அண்ணன் காளிராஜன் நேற்று முன்தினம் முருகேசுவரியை சந்தித்து பேசி உள்ளார்.
அப்போது முருகேசுவரி தனது பேரன் ராகுலுக்குத்தான் வாரிசு வேலை கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
காளிராஜன் நேற்று காலை 9 மணிக்கு முருகேசுவரியின் வீட்டுக்கு வந்து மீண்டும் சமாதானம் பேசி உள்ளார். அப்போது முருகேசுவரியுடன், உறவினரான கருப்பாயி தமயந்தி (60) என்ற பெண் இருந்துள்ளார். பேச்சுவார்த்தையின்போது முருகேசுவரிக்கும், காளிராஜனுக்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கத்தியால் குத்தி கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த காளிராஜன், ஆத்திரத்தில் முருகேசுவரியை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவரை தடுக்க வந்த கருப்பாயி தமயந்திக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.
போலீசில் சரண்
பின்னர் காளிராஜன் திருத்தங்கல் போலீஸ் நிலையத்துக்கு சென்று இரட்டைக்கொலை குறித்து கூறி சரண் அடைந்தார்.
அதனை தொடர்ந்து, போலீசார் அங்கிருந்து சம்பவ இடமான ஸ்டேட் பாங்க் காலனிக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் முருகேசுவரி, கருப்பாயி தமயந்தி ஆகியோரின் உடல்களை அந்த வீட்டில் இருந்து, பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து உறவினர்கள் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வசித்து வருபவர்களிடம் விசாரணை நடத்தினர்.
போலீசில் சரண் அடைந்த காளிராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீஸ்காரரின் தாய்
கொலை செய்யப்பட்ட கருப்பாயி தமயந்தியின் மகன் கணேசன், எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்து தாயின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இந்த இரட்டைக் கொலை குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், துணை சூப்பிரண்டு ராஜாமணி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
வீட்டில் பதிவான தடயங்களை பதிவு செய்து கொண்டனர். அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் விசரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக ரதிலட்சுமி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே வீட்டில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.