கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது
தள்ளுவண்டி கடைக்காரர் மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரியை அடுத்த பெரும்புலிப்பாக்கம் சங்கரம்பாடிசத்திரம் பகுதியை சேர்ந்தவர் ரகமத்துல்லா. இவரின் மகன் அமானுல்லா (வயது 27). இவர் பனப்பாக்கத்தில் தள்ளுவண்டியில் சிக்கன் பகோடா மற்றும் மீன் வறுவல் வியாபாரம் செய்துவருகிறார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வாடிக்கையாக கடைக்கு வரும் இரண்டு வாலிபர்கள் வந்து சிக்கன் பகோடா மற்றும் மீன் வறுவல் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முதலில் பணம் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, தள்ளுவண்டியில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து அமானுல்லா மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதுக்குறித்து அமானுல்லா நெமிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம், பள்ளம்பாக்கம் கிராமத்தை சார்ந்த கோதண்டம் என்பவரின் மகன் ராஜசேகர் (21), புள்ளலூர் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரின் மகன் சஞ்சய் (19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.