பெரியபாளையம் அருகே ஊராட்சி செயலர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு


பெரியபாளையம் அருகே ஊராட்சி செயலர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
x

பெரியபாளையம் அருகே ஊராட்சி செயலர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு போனது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே அக்கரபாக்கம் கிராமம், மேட்டு காலனியில் வசித்து வருபவர் தேன்மொழி (வயது 37). இவர் பூரிவாக்கம் ஊராட்சிமன்ற செயலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மதன்குமார் பாலவாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை மதன்குமார் வேலைக்கு சென்று விட்டார். அவரது மகன்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றனர். இதன் பின்னர், தேன்மொழி தனது வீட்டை பூட்டிவிட்டு பூரிவாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய மகன்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பட்டுப்புடவைகள், ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த தேன்மொழி வீட்டுக்கு வந்து பார்த்தபோது பிரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.20 ஆயிரம் உள்ளிட்டவைகள் காணாமல் பேனது தெரிய வந்தது. இது குறித்து அவர் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்து கொண்டு கொள்ளை சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story