200 நிறுவனங்கள்; 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள்:ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்30-ந் தேதி நடக்கிறது
200 நிறுவனங்கள்; 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 30-ந் தேதி நடக்கிறது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன. ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
சென்னை, கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 நிறுவனங்கள் இந்த முகாமில் பங்கேற்கிறார்கள். சுமார் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10-ம்வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் முதல் உயர் கல்வி வரை உள்ள அனைத்து படிப்புகளுக்கும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணிகள் பெறும் வாய்ப்பு உள்ளது. நிறுவனங்கள் நடத்தும் நேர்முக தேர்வுகளில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு -ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி பணி நியமன உத்தரவுகளை வழங்க உள்ளார். முகாமில் பங்கேற்க அனுமதி முற்றிலும் இலவசம். தனியார் துறை வேலை வாய்ப்பு பெறுபவர்களுக்கு, வேலைவாய்ப்பு அலுவலக பணிமூப்பு ரத்து செய்யப்படாது.
இதுபற்றிய மேலும் விபரங்களை erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறி உள்ளார்.