200-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
கும்பகோணத்தில் 200-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் 200-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
கும்பகோணம் அருகே திருமண்டங்குடி பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலைக்கு கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர்.
அவ்வாறு அனுப்பிய கரும்புக்காக விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ.100 கோடியை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்து உள்ளது. இந்த தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் கடந்த ஆண்டு (2022) நவம்பர் 30-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இந்த தொடர் போராட்டம் நேற்று 200-வது நாளாக நடைபெற்றது.
கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம்
இதனை முன்னிட்டு, தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கரும்பு விவசாயிகள் கையில் கரும்புகளுடன் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், தமிழ்நாடு விவசாயச் சங்க மாவட்ட துணைச் செயலாளர் துரைராஜ், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர.விமலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
1 லட்சம் குடும்பத்தினர் பாதிப்பு
மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு சர்க்கரை ஆலைகள், தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் வசம் சென்று விட்டது. இதனால் 1 லட்சம் கரும்பு விவசாயிகளின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு, தமிழக அரசு உடனடியாக தீர்வு காண்பதோடு, கரும்பு விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும்.
மேலும், விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.