தம்பி தீபக் மீது பரபரப்பு புகார்: சென்னையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் வீட்டில் நுழைந்த தீபா
தமிழகத்தின் முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா’ நிலையத்தில் தான் தனது இறுதி காலம் வரை வசித்து வந்தார்.
சென்னை,
பின்னர், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, டிசம்பர் மாதம் 5–ந்தேதி மரணம் அடைந்தார். அன்று இரவு அவரது உடல் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. மறுநாள் (டிசம்பர் 6–ந்தேதி) பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட அவரது உடல், அன்று இரவே எம்.ஜி.ஆர். சமாதியின் அருகே அடக்கம் செய்யப்பட்டது.
வீட்டில் யாரும் இல்லைஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு, அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில், அவரது தோழியான சசிகலா வசித்து வந்தார். 40 நாட்கள் அங்கு தங்கியிருந்த சசிகலாவும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் 15–ந்தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதன் பிறகு, கடந்த 4 மாத காலமாக அந்த வீட்டில் யாரும் இல்லை. ஒரு சில பணியாளர்களே தங்கி உள்ளனர். மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில் தனியார் பாதுகாவலர்களும் போயஸ் கார்டன் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தீபா ‘திடீர்’ வருகைஇந்தநிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளருமான ஜெ.தீபா, நேற்று காலை 10.15 மணி அளவில் திடீரென்று போயஸ் இல்லத்துக்கு காரில் வந்தார். அவருடன் பேரவை நிர்வாகியான ராஜா உள்பட 4 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் வீட்டு வளாக பகுதிக்குள் நுழைந்தனர்.
அப்போது அங்கு நின்றிருந்த தனியார் பாதுகாவலர்கள், ‘‘நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். அதற்கு தீபா, ‘‘எனது தம்பி தீபக் தான் இங்கே வரச்சொன்னான்’’ என்று கூறிவிட்டு, வீட்டிற்குள் சென்றார். அவருடன் வந்தவர்களும் உள்ளே சென்றனர். பின்னர், வீட்டின் உள்ளே இருந்த சசிகலாவின் புகைப்படங்களை அவர்கள் வெளியே தூக்கி வந்தார்கள். இதனால், சந்தேகம் அடைந்த பாதுகாவலர்கள், போனில் யாரிடமோ பேசினார்கள். உடனே, தீபா மற்றும் அவரது ஆதரவாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
தள்ளுமுள்ளுபோயஸ் கார்டன் இல்லத்திற்கு தீபா வந்த தகவலை கேள்விப்பட்டு, பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சியினர் அங்கு குவிந்தனர். ஆனால், அவர்களை வீட்டின் அருகே செல்லவிடாமல், சுமார் 250 மீட்டர் தொலைவிலேயே போலீசார் இரும்பு தடுப்பு மூலம் தடுத்து நிறுத்தினார்கள்.
இந்த நேரத்தில், போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து வெளியே வந்த தீபா, கையை காட்டி ஊடகத்தினரை உள்ளே வருமாறு அழைத்தார். இதனால், ஊடகத்தினர் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், ஊடகத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தம்பியுடன் வாக்குவாதம்இந்த பரபரப்புக்கு இடையே, தீபாவின் தம்பி தீபக் அங்கு காரில் வந்தார். அவருடன் தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘‘என்னை இங்கே நீ தானே வரச்சொன்னாய்’’ என்று தீபா கோபமாக கூறினார்.
ஆனால், தீபக் எதையும் கண்டுகொள்ளாதது போல், ‘‘முதலில் நீ இங்கிருந்து கிளம்பு’’ என்றார். ஆனால், தொடர்ந்து தீபா வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தீபக் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
சற்று நேரத்தில், அங்கு தீபாவின் கணவர் மாதவன் வந்தார். அவரை போலீசார் அனுமதித்தனர். அவர் தீபாவிடம் சென்று நடந்த சம்பவம் பற்றி கேட்டுக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில், அங்கு மீண்டும் வந்த தீபக், மாதவனை பார்த்து, ‘‘பிரச்சினை பண்ண நீ இங்கு வந்திருக்கிறாயா?’’ என்று கோபமாக கேட்டார். உடனே, தீபா, தீபக்குடன் சண்டைபோட்டார். இதனால், அங்கிருந்து தீபக் கோபமாக சென்றுவிட்டார்.
குழம்பிப்போன போலீசார்அதன்பின்னர், தீபாவின் கணவர் மாதவனுக்கும், ராஜாவுக்கும் (தீபா பேரவை நிர்வாகி) இடையே திடீரென பிரச்சினை வெடித்தது. ராஜா கோபத்துடன் மாதவனை திட்டினார். உடனே தீபா தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே தெரியாமல் குழம்பிப்போய் நின்றனர். இருந்தாலும், தீபாவை சமரசம் செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதனால் போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தீபக் மீது குற்றச்சாட்டுபின்னர், பத்திரிகையாளர்களுக்கு ஆவேசமாக பேட்டி அளித்த தீபா, வீட்டின் உள்ளே இருந்தவர்கள் தன்னை அடித்து துரத்தியதாக புகார் கூறினார். மேலும் தீபக், சசிகலாவின் ஆள் என்றும், அவருடன் சேர்ந்து ஜெயலலிதாவை கொன்றுவிட்டதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்தார்.
பின்னர் மதியம் 12.15 மணி அளவில், தனது கணவர் மாதவனுடன் தீபா அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
தீபா நேற்று திடீரென்று போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்ததாலும், இதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களாலும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாதவன் புகார்இந்தநிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் தீபாவின் கணவர் மாதவன் தனது ஆதரவாளர்களோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்றபோது, தீபாவும், தானும் தாக்கப்பட்டதாகவும், தனக்கும், தீபாவின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கூறி இருந்தார்.
போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெ.தீபாவை தாக்கியவர்கள் யார்? என்று கண்டுபிடித்து, சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
செல்போன்கள் மாயம்சென்னை போயஸ் கார்டனில் போலீசார்–பத்திரிகையாளர்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் 3 நிருபர்களின் செல்போன்கள் மாயமானது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.