நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்தது; டெல்டா பாசனத்திற்கு இன்று மேட்டூர் அணை திறப்பு இல்லை


நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்தது; டெல்டா பாசனத்திற்கு இன்று மேட்டூர் அணை திறப்பு இல்லை
x
தினத்தந்தி 12 Jun 2017 2:20 AM IST (Updated: 12 Jun 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்துள்ளதால், டெல்டா பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய பெய்யும் தென்மேற்கு பருவமழை மற்றும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடிய பெய்யும் வடகிழக்கு பருவமழை நீரை தேங்கி வைத்து பாசனம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேட்டூர் அணை கட்டப்பட்டது.

ஆனால், கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கை கொடுப்பது இல்லை. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு உரிய சாத்தியக்கூறுகள் ஏற்பட்டு வருகிறது.

இன்று தண்ணீர் திறப்பு இல்லை

கடந்த 5 ஆண்டுகளாக குறித்த நேரமான ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. கடந்த ஆண்டு 3 மாதம் காலதாமதமாக செப்டம்பர் மாதம் 20-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அளிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது, பருவமழை கை கொடுக்காததால் அணையில் இருந்த நீர்இருப்பு மிகவும் குறைந்து கொண்டே சென்றதால் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டது. தாளடி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இந்த ஆண்டும் நீர்வரத்து குறைந்ததால் நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23.56 அடியாக குறைந்து விட்டது. இதனால் அணை குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதனால் இன்று (திங்கட்கிழமை) மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

விவசாயிகள் கவலை

அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவேண்டும் என்றால் அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் ஒரே சீராக இருந்தால் மட்டுமே அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடமுடியும்.

இந்த பாசனத்தின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசனவசதி பெறுகிறது. எனவே, இந்த ஆண்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்பதால் டெல்டா பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இருப்பினும் சம்பா, தாளடிக்காவது தண்ணீர் கிடைக்க பருவமழை கைகொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வருணபகவானை வேண்டி வருகின்றனர்.


Next Story