மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழ்நிலை: குறுவை சாகுபடிக்காக ரூ.57 கோடியில் தொகுப்பு திட்டம்


மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழ்நிலை:  குறுவை சாகுபடிக்காக ரூ.57 கோடியில் தொகுப்பு திட்டம்
x
தினத்தந்தி 12 Jun 2017 11:15 PM GMT (Updated: 12 Jun 2017 8:00 PM GMT)

மேட்டூர் அணையை திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்காக ரூ.56.92 கோடியில் தொகுப்பு திட்டத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்வது குறித்த ஆய்வுக்கூட்டம் எனது தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்ட அளவு, கர்நாடக மாநிலத்திலிருந்து பெறப்பட வேண்டிய தண்ணீர் குறித்தும், தற்போதுள்ள சூழ்நிலையில் குறுவை சாகுபடியை மேற்கொள்வது பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

காவிரி டெல்டா பகுதியின் பயிர் சாகுபடியானது மேட்டூர் அணையில் இருந்து பெறப்படும் காவிரி ஆற்றின் நீர் பாசனத்தினை சார்ந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீரின் அளவு 90 அடி இருக்கும்போது, குறுவை நெல் சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12–ந் தேதி அணை திறக்கப்படும்.

தென்மேற்கு பருவமழை குறித்த காலத்தில் இயல்பான அளவு பெறப்படும்பட்சத்தில் மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கப்பெறும் பாசன நீரின் மூலம், இயல்பான குறுவை சாகுபடி மேற்கொள்ள இயலும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு கர்நாடகா விகிதாச்சார முறைப்படி பாசனத்திற்கு போதுமான தண்ணீர் திறந்துவிடாததால் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடியும், சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், தற்போது மேட்டூர் அணையின் முழுக்கொள்ளளவான 120 அடியில், நீர்மட்டம் 23.68 அடி மட்டுமே உள்ளது. தற்போதுள்ள நீரைக்கொண்டு, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை திறந்துவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

பொதுவாக, டெல்டா பகுதியில் குறுவை பருவத்தில் கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நீங்கலாக மற்ற 6 மாவட்டங்களில் நெற்பயிர் சுமார் 3.15 லட்சம் ஏக்கரிலும், பயறு வகைப் பயிர்கள் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் ஏப்ரல் முதல் ஜூலை மாதம் முடிய சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகிறது.

கால்வாய் பாசனம் இல்லாத காலங்களில் இதர நீர் ஆதாரங்களான வடிமுனைக் குழாய் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலிருந்து பெறப்படும் நீரினைக் கொண்டு டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி நடைபெறும். தண்ணீரை மிகவும் சிக்கனமாகவும், திறமையாகவும் கையாள்வதற்கு ஏதுவாக, நெற்பயிருக்கு மாற்றாக, மாற்று பயிர் சாகுபடி முறையான பயறு வகை சாகுபடியை ஊக்குவிப்பது மிகவும் அவசியமாகிறது.

தற்போது நிலவுகின்ற சூழ்நிலையில், குறுவை விவசாயிகளின் நலனை பாதுகாக்க சில அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அதன்படி, கடந்த ஐந்தாண்டுகளில் வழங்கியதுபோல், டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

நெல் பயிர் சாகுபடி தற்போதுள்ள நீர் ஆதாரங்களைக் கொண்டு குறுவை பருவத்தில் 1.60 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு மாற்றாக பயறு வகை பயிர்கள் சாகுபடி 1.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும்.

நெல் நடவை குறித்த காலத்தில் மேற்கொள்ளவும், களை எடுப்பதை எளிமையாக்கும் வகையிலும் நடவு எந்திரங்களை கொண்டு நெல் நடவு செய்ய ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதமும்,

நிலத்தின் தன்மையை மேம்படுத்தவும், மகசூலை அதிகரிக்கவும் ஜிங்க் சல்பேட் மற்றும் உயிர் உரங்கள் ஏக்கருக்கு ரூ.520 வீதமும்,

நுண்ணூட்ட உரங்கள் ஏக்கருக்கு ரூ.200 வீதமும் 100 சதவீத மானியமாக வழங்கப்படும்.

டெல்டா பகுதி விவசாயிகளிடையே பயறு வகைப் பயிர்களின் சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் பயறுவகை சாகுபடிக்குத் தேவையான, தரமான பயறுவகை விதைகள் ஏக்கருக்கு ரூ.960 வீதமும்,

மகசூலை அதிகரிக்க இலைவழி டி.ஏ.பி. உரமிட மற்றும் உயிர் உரங்கள் வினியோகிக்க ஏக்கருக்கு ரூ.640 வீதமும் 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.

இதுதவிர பருவமழையினை முழுமையாக பயன்படுத்தி குறுவை சாகுபடியை உடனே தொடங்கும் பொருட்டு உழவு பணிகளை மேற்கொள்ள ஏக்கருக்கு ரூ.500 என்ற அளவில் மானிய தொகையும்,

டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி குறுவை சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில் 110 மில்லி மீட்டர் விட்டம் மற்றும் 6 மீட்டர் நீளம் கொண்ட பிவிசி குழாய்கள் 30 எண்கள் கொண்ட 1,300 அலகுகள், அலகு ஒன்றுக்கு ரூ.21 ஆயிரம் வீதமும் மானியம் வழங்கப்படும்.

காவிரி டெல்டா மற்றும் கல்லணை பகுதியின் கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியின் மண் வளத்தை அதிகரிக்கும் வகையில் பசுந்தாள் உர பயிர் சாகுபடி மேற்கொள்ள ஏக்கர் ஒன்றிற்கு 1,200 ரூபாய் வீதமும் 100 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

டெல்டா பகுதிகளில் வடிமுனைக் குழாய் மற்றும் ஆழ்துளை குழாய் ஆகியவற்றின் நீர் ஆதாரத்தைக் கொண்டு குறுவை சாகுபடி இயல்பான பரப்பில் மேற்கொள்ளவும், குறைந்த நீர் ஆதாரத்தைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் பயிர் சாகுபடி செய்ய, பயறு வகை பயிர் சாகுபடியினை மாற்று பயிர் சாகுபடியாக ஊக்கப்படுத்தவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் அறிவிக்கப்படும் இந்த குறுவை தொகுப்பு திட்டம், நடப்பாண்டில் 56 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

இப்பணிகளை உடனடியாக தொடங்க வேளாண்மைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story