கலப்பட பால் விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி


கலப்பட பால் விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 12 Jun 2017 8:41 PM GMT (Updated: 12 Jun 2017 8:41 PM GMT)

கலப்பட பால் விற்பனை செய்யப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர் ஆர்.கார்த்திக்கேயன். இவர், சென்னை ஐகோர்ட்டில், தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ரசாயனம்

உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் –2006–ன் படி பால் பாக்கெட் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களது பாலை தரப்பரிசோதனைக்கு உட்படுத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று இருக்கவேண்டும். தமிழக அரசின் பால் கூட்டுறவு சங்கமான ஆவின் மூலம், தமிழகத்தில் 20 சதவீத பால் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 80 சதவீத பால் விற்பனை 12 தனியார் பால் நிறுவனங்கள் மூலம் நடைபெறுகிறது.

இந்தநிலையில், கடந்த மே மாதம் 24–ந்தேதி தமிழக பால் வளத்துறை அமைச்சர், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதாக அதிரடி தகவலை பத்திரிகைகள் மூலம் அறிவித்தார்.

மனித இனத்துக்கு ஆபத்து

மேலும், அந்த தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் கலப்பட பாலின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். மறுநாள், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் இருப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.

ஆனால், பாலை ஆய்வு செய்யும் புனேயில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்தின் இயக்குனர், தமிழகத்தில் இருந்து மாதிரி பால் சோதனைக்காக தங்களிடம் வரவில்லை என்று ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, அமைச்சர் சொல்வது போல, பால் கெட்டுப்போகாமல் இருக்க அதில் தனியார் நிறுவனங்கள் ரசாயனத்தை கலந்திருந்தால், அது மனித இனத்துக்கு மிகப்பெரிய தீங்கையும், ஆபத்தையும் ஏற்படுத்தும்.

என்ன நடவடிக்கை?

எனவே, தமிழகத்தில் கலப்பட பால் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும். இதுதவிர, தமிழகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தை முறையாக அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முறையாக எடுக்கவேண்டும். அத்துடன் கலப்பட பால் விற்பனையை தடுக்க இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், உணவுப் பாதுகாப்புத்துறை இயக்குனர், பால்வளத்துறை ஆணையர் ஆகியோர் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

பதில் அளிக்கவேண்டும்

மேலும், அந்த உத்தரவில், ‘பால் கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான 12 தனியார் பால் நிறுவனங்களும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 24–ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.


Next Story