சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் பணியை நிறுத்த தேவை இல்லை; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
வழக்கு நிலுவையில் உள்ளது என்பதால், மெரினா கடற்கரைக்கு முன்புள்ள நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அகற்றும் பணியை நிறுத்த தேவையில்லை என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் திலகம் சிவாஜி சமூகநல பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கடந்த 2001–ம் ஆண்டு ஜூலை 21–ந் தேதி இறந்தார். இவரது சிலையை, மெரினா கடற்கரை முன்புள்ள ராதாகிருஷ்ணன் சாலை–காமராஜர் சாலை சந்திப்பில் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த சிலையை அகற்ற உத்தரவிட்டது.
இதற்கிடையில், மெரினா கடற்கரை அணுகு சாலையோரம் கண்ணகி, திருவள்ளுவர், அவ்வையார் உள்ளிட்ட சிலைகளின் வரிசையில், சிவாஜி கணேசன் சிலையையும் வைக்கவேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக முதல்–அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இந்த கோரிக்கையை இதுவரை தமிழக அரசு பரிசீலிக்கவில்லை. எனவே, என் கோரிக்கை மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, ‘மனுவுக்கு 4 வாரத்துக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். அதே நேரம், இந்த ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்ச் உத்தரவின்படிதான், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, இந்த வழக்கை காரணம் காட்டி, சிலையை அகற்றும் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்த தேவையில்லை. அந்த நடவடிக்கைகளை அரசு தொடரலாம் என்பதை தெளிவுப்படுத்துகிறேன்’ என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், வழக்கு விசாரணையின்போது, ‘சிவாஜி கணேசனின் நினைவு நாள் வருகிற 21–ந் தேதி வருகிறது. அன்று மட்டும் இந்த சிலையை அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டாம்’ என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.