‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல் பெற கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும்


‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல் பெற கோரிய வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 Aug 2017 3:45 AM IST (Updated: 6 Aug 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிரான சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறுவது தொடர்பான வழக்கிற்கு மத்திய அரசு பதிலளிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் விதமாகவும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படவில்லை.

ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்தோ, மத்திய உள்துறையிடம் இருந்தோ இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இந்த கோப்புகள் தற்போது எங்கு உள்ளது? என்பதும் தெரியவில்லை. எனவே அந்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் பெறும் நடைமுறைகளை துரிதப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும். அதுவரை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை நடத்த தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதுபோல மேலும் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் எல்லாம், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல், ‘நீட் தேர்வுக்கு எதிரான சட்டத்துக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறும் நடவடிக்கையை தமிழக அரசு தாமதப்படுத்தவில்லை. ‘நீட்’ தேர்வில் விலக்கு பெற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முறையாக மேற்கெண்டு வருகிறது’ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி, மத்திய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 11–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story