சென்னை–மதுரை இடையேயான இரட்டை ரெயில் பாதை பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும்


சென்னை–மதுரை இடையேயான இரட்டை ரெயில் பாதை பணிகள் இந்த ஆண்டுக்குள் முடிக்கப்படும்
x
தினத்தந்தி 15 Aug 2017 10:15 PM GMT (Updated: 15 Aug 2017 6:45 PM GMT)

நாடு முழுவதும் 71–வது சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

சென்னை,

தெற்கு ரெயில்வே சார்பில் அதன் பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி சென்னை அயனாவரத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை மைதானத்தில் தேசிய கொடி ஏற்றினார்.

தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு மரியாதையை வஷிஷ்டா ஜோஹ்ரி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தெற்கு ரெயில்வேயின் ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. பாரி மற்றும் ரெயில்வே உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தெற்கு ரெயில்வேயின் பொதுமேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி பேசியதாவது:–

தெற்கு ரெயில்வே துறைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு, தூய்மை, பணி வளர்ச்சி, நிதி ஆதாரம் ஆகியவற்றிற்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த ஆண்டில் மேல் கண்ட கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வளர்ச்சி பணிகளில் இலக்கை அடைவோம்.

அதேபோல் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில்களில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு (கடந்த ஜூலை மாதம் வரை) பயணிகள் சேவை அதிகரித்து 4.9 சதவீத கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மேலும், சென்னை–மதுரை இடையேயான ‘497 கிலோ மீட்டர்’ தூரம் கொண்ட இரட்டை ரெயில் பாதை திட்டம் மற்றும் மின்மயமாக்கும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.

பொன்மலை–தஞ்சை பகுதிகளுக்கு இடையேயான 47 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இரட்டை வழித்தடங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் ஆரியங்காவு–எடமன், காரைக்குடி–பட்டுக்கோட்டை, சென்னை கடற்கரை–கொருக்குப்பேட்டை இடையேயான 3 மற்றும் 4–வது வழித்தடங்கள், கொருக்குப்பேட்டை–திருவொற்றியூர் பகுதிகளுக்கு இடையேயான 4–வது வழித்தடம் அமைக்கும் பணிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட 40 சதவீத ரெயில் பெட்டிகளில் ‘பயோ டாய்லெட்’ வசதி கொண்ட கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை இன்னும் அதிகரிக்கப்பட்டு விரைவில் தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயோ டாய்லெட் வசதி கொண்ட கழிப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகளை வஷிஷ்டா ஜோஹ்ரி பார்வையிட்டார்.

சென்னை கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் அதன் மேலாளர் நவீன்குலாட்டி தேசிய கொடி ஏற்றினார். ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் அதன் பொது மேலாளர் மணி தேசிய கொடி ஏற்றினார்.


Next Story