தெற்கு ரெயில்வே சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரசாரம் 31–ந் தேதி வரை நடக்கிறது
தெற்கு ரெயில்வே சார்பில் ‘தூய்மை இந்தியா’ சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் நேற்று தொடங்கியது.
சென்னை,
ரெயில் நிலையம் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் தூய்மை கடைபிடிப்போம் என்று தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், தெற்கு ரெயில்வே பொது மேலாளர் வஷிஷ்டா ஜோஹ்ரி உறுதிமொழி ஏற்றார். அதைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதையடுத்து சென்டிரல் ரெயில் நிலையத்தில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பள்ளி மாணவ–மாணவிகள் பங்கேற்று, தூய்மையின் அவசியம் பற்றி பயணிகளுக்கு பல கலை நிகழ்ச்சி வாயிலாக எடுத்துரைத்தனர். மேலும் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இடங்களில் தூய்மையை பேணுவது எப்படி? என்பதை விளக்கும் துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது.
இந்த சிறப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி வரும் 31–ந் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் ரெயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள உள்ளனர் என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.