பெரும்பான்மையை நிரூபிக்க சட்டமன்றத்தை ஒரு வாரத்தில் கூட்டவும் - ஆளுநருக்கு எதிர்க்கட்சிகள் ‘கெடு’
ஆட்சியில் இருந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வாரத்திற்குள் உத்தரவிட ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ‘கெடு’ விதித்துள்ளனர்.
சென்னை
இன்று மாலை கூட்டணி கட்சியான காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் ஆளுநரை சந்தித்து ஒவ்வொருவரின் சார்பிலும் தனித் தனியே கடிதம் கொடுத்துள்ளனர் ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சி குழுவினர்.
அக்கடிதத்தில் ஆளும் கட்சிக்கு 114 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமேயுள்ளது என்றும் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகளான திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 ஆகியவற்றுடன் தினகரன் தலைமையிலான போட்டி அதிமுகவின் 21 பேர் கொண்ட குழு ஆகியவையுள்ளன. இதன் கூட்டுத்தொகை 119 என்பதால் ஆளும்கட்சி பெரும்பான்மை இழந்துவிட்டது; எனவே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
கடந்த காலங்களில் எஸ் ஆர் பொம்மை வழக்கு, அருணாச்சலப் பிரதேச வழக்கு ஆகியவற்றின் முன்னுதாரணத்தின்படி அரசின் பெரும்பான்மை நிரூபிக்கப்பட வேண்டிய இடம் சட்டமன்றம் என்பதால் ஆளுநர் ஒருவார காலத்திற்குள் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க கேட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“114 பெரிதா, 119 பெரிதா?” என்பதை முடிவு செய்து அதன்படி ஆளுநர் நடப்பார் என்று நம்புவதாகவும், அவர் தற்போது தனது நிலைப்பாட்டில் சற்று மாறியிருப்பது போல் காணப்படுவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அப்படி ஆளுநர் முடிவு செய்யாவிட்டால் நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடப் போவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தர்.
இவ்விஷயத்தில் தான் பத்திரிகையாளர்களை சந்திப்பது இதுவே கடைசியாக இருக்கும் என்றும் அவர் முத்தாய்ப்பாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story