தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு


தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 15 Oct 2017 12:15 AM GMT (Updated: 14 Oct 2017 8:58 PM GMT)

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தீபாவளியை சொந்த ஊரில் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

சென்னை,

முன்னதாக லீவு கிடைத்தவர்கள் நேற்றே குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட தொடங்கி விட்டனர்.

இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய 3 நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்பியவர்களுக்கு ரெயில், பஸ்களில் முன்பதிவு டிக்கெட் இல்லை. ரெயில்களில் 3 மாதத்துக்கு முன்பும், அரசு பஸ்களில் ஒரு மாதத்துக்கு முன்பும், முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.

இதனால், அவதிக்குள்ளான பொதுமக்கள், பஸ்களை இயக்க அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 22–ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, சென்னையில் இருந்து மட்டும் பிற ஊர்களுக்கு இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு 4,820 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதாவது, இன்று 788 சிறப்பு பஸ்களும், நாளை 1,844 சிறப்பு பஸ்களும், 17–ந் தேதி (நாளை மறுநாள்) 2,188 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதேபோல், மாநிலத்தின் பிற ஊர்களுக்கு இடையே இன்று முதல் 3 நாட்களுக்கு 11,111 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு திரும்பும் பொதுமக்களுக்காகவும் 19–ந் தேதி முதல் 22–ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன. பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு மட்டும் குறிப்பிட்ட 3 நாட்களில் 3,794 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பிற ஊர்களில் இருந்து முக்கிய பகுதிகளுக்கு 7,043 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

300 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் இருக்கும் ஊர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்களுக்கு இணையதள மூலம் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் மூலம் உடனடியாக முன்பதிவு செய்துகொள்வதற்காக, சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. இதேபோல், தாம்பரம் சானிடோரியத்தில் 2 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்களும், பூந்தமல்லி பஸ் நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு கவுண்ட்டரும் என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் 13–ந் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகையையொட்டி இயக்கப்படும் அரசு சிறப்பு பஸ்களை கோயம்பேட்டில் இருந்து இயக்கினால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு, சென்னை நகரின் 5 முக்கிய பகுதிகளில் இருந்து பஸ்களை பிரித்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்பேடு தவிர அண்ணாநகர் (மேற்கு) பஸ் நிலையம், தாம்பரம் புதிய பஸ் நிலையம் (மெப்ஸ்), பூந்தமல்லி பஸ் நிலையம், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகேயுள்ள பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து இன்று முதல் வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.

நகரின் பிற பகுதிகளில் இருந்து இந்த 5 பஸ் நிலையங்களுக்கு மாநகர சிறப்பு பஸ்கள் இன்று முதல் 3 நாட்கள் 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளன. அதாவது, வழக்கமாக செல்லும் மாநகர பஸ்களைவிட கூடுதலாக 243 சிறப்பு நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதே நேரத்தில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பஸ்களில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story