டெங்கு காய்ச்சல் ஒழிப்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட தயாரா?


டெங்கு காய்ச்சல் ஒழிப்பில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட தயாரா?
x
தினத்தந்தி 15 Oct 2017 11:15 PM GMT (Updated: 15 Oct 2017 4:24 PM GMT)

டெங்கு காய்ச்சல் ஒழிப்பில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட தயாரா? என்று முதல்–அமைச்சருக்கு, டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘டெங்குவை ஒழிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’, என்று முதல்–அமைச்சர் மீண்டும், மீண்டும் கூறி மக்களை குற்றவாளிகளாக்க முயல்கிறார். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு பகலாக பாடுபடுவதாகக் கூறும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்படி என்னென்ன நடவடிக்கைகளை அரசு எடுத்தது என்பதை பட்டியலிட தயாரா?

டெங்கு காய்ச்சல் கடந்த 5 மாதங்களாக பரவி வருவதாலும், அதுகுறித்த விழிப்புணர்வை பா.ம.க. ஏற்படுத்தி வருவதாலும் மக்கள் விழிப்புணர்வு பெற்று தங்களின் கடமைகளை சிறப்பாக செய்திருக்கின்றனர். ஆனால், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வி‌ஷயத்தில் தங்கள் கடமைகளை செய்திருக்கிறோமா? என்று முதல்–அமைச்சரும், அமைச்சர்களும் கண்ணாடி முன் நின்று கேட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், துப்புரவுப் பணிகளும், சுகாதார பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை. மேலும் சென்னையிலும், புறநகர் மாவட்டங்களிலும் குப்பை அள்ளும் பணிகள் சரியாக நடைபெறுகிறதா? என்பதையெல்லாம் என்னுடன் நேரில் வந்து ஆய்வு செய்ய எடப்பாடி பழனிசாமி தயாரா?

அரசு மேடை கிடைத்து விட்டது என்பதற்காக எதிர்க்கட்சிகள் மீதும், பொதுமக்கள் மீதும் பழி சுமத்துவதற்கு பதிலாக அதிகாரத்தை பயன்படுத்தி டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாயென்றால் டெங்கு காய்ச்சலை விட பேரழிவை ஏற்படுத்தும் அரசாக தான் இந்த பினாமி அரசாங்கத்தை மக்கள் பார்ப்பார்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story