சமூக வலைத்தளங்களில் அவதூறு தகவல்; நடிகர் ரோபோ சங்கர், கமிஷனர் அலுவலகத்தில் மனு
நடிகர் தனுஷ் நடித்த மாரி உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர்.
சென்னை,
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார். இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–
டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எனது பெயரில் தவறான, அவதூறான தகவல்களை சிலர் வேண்டுமென்றே பரப்புகிறார்கள். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பற்றியும் எனது பெயரில் அவதூறு தகவல்களை ஏற்கனவே பரப்பினார்கள். அதைப்பற்றி விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். தற்போது, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, பத்திரிகையாளர்களை தரக்குறைவாக திட்டி நான் கருத்துகளை பதிவு செய்ததாக தவறான தகவல்கள் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.
நான் தற்போது டுவிட்டரில் இருந்து விலகிவிட்டேன். எனது செல்போனும் காணாமல் போய்விட்டது. பத்திரிகையாளர்களைப்பற்றி நான் அவதூறு தகவல்கள் எதுவும் வெளியிடவில்லை. எனது வளர்ச்சிக்கு பத்திரிகைகள் தான் முக்கிய காரணம்.
என்னைப்பற்றி தவறான தகவல்கள் வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனு கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.