அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைக்க வேண்டும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

சேலம் தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநகராட்சி முன்னாள் துணைமேயருமான நடேசன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நான் சேலம் மாவட்டம் மணியனூர் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்து வருகிறேன். சேலம் தெற்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சக்திவேல் (சசிகலா அணி), ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த என்னை அணிமாறும்படி கூறினார். நான் ஏற்க மறுத்ததால், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிக்கும்படி முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இதன் அடிப்படையில் என்னையும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மற்ற நிர்வாகிகளையும் நீக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியும், பள்ளி தலைமை ஆசிரியரும் முயற்சித்து வருகின்றனர். 2021–ம் ஆண்டு வரை எங்களது பதவிக்காலம் உள்ள நிலையில் எங்களை அந்த பதவியில் இருந்து நீக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்கள் நலனுக்காக நடத்தப்படும் பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தலில் அரசியல் சாயம் பூசப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தியதன் மூலம் மனுதாரருக்கும், எம்.எல்.ஏ.வுக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும்.

எனவே, மாணவர்களின் நலன், கல்வி வளர்ச்சி கருதி அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சங்கத்தை ஒழுங்குபடுத்த தனி விதிகளை வகுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story