மீனவர்கள் பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும்: கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பேச்சு
நாடாளுமன்றத்தில் மீனவர்கள் பிரச்னைக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும் என கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் ஒகி புயலால் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி சின்னதுறை பகுதிக்கு வந்தார்.சின்னத்துறை பகுதியில் புயல் பாதிப்புகள் குறித்து ராகுல் காந்தி ஆய்வு செய்தார். மீனவ மக்களை சந்தித்து குறைகளை கேட்டார் பின்னர் அவர்கள் மத்தியில் பேசினார்.
ராகுல் காந்தி திரண்டிருந்த மீனவர்கள் மத்தியில் தமிழில் வணக்கம் கூறி பேச்சை தொடங்கினார்
அவர் பேசும்பொழுது, ஒகி புயலால் மீனவர்களின் வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. நான் முன்கூட்டியே இங்கு வரவேண்டும் என நினைத்தேன். குஜராத் தேர்தலால் கன்னியாகுமரிக்கு வர முடியவில்லை. தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன்.
குடும்ப தலைவர், சகோதரர்களை இழந்துள்ளது பெருந்துயரம். நாடாளுமன்றத்தில் மீனவர்களுக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும். எந்த விதத்தில் உதவி செய்ய முடியுமோ அந்த விதத்தில் நாங்கள் உதவி செய்வோம்.
இதுபோன்ற சூழலில் யார் துணை நிற்பார்கள் என மக்களுக்கு தெரியும். ஒகி புயலால் மீனவர்களும், விவசாயிகளும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளனர்.
நாடு முழுவதும் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும், உங்கள் பிரச்சனைகளை உரத்த குரலில் எழுப்புவோம்.மீனவர்களுக்கென தனி அமைச்சர் இருந்திருந்தால் உங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும்.
என கூறியுள்ளார்.