இன்ஸ்பெக்டர் சுட்டு கொலை: கொள்ளையன் நாதுராமின் கூட்டாளி கைது


இன்ஸ்பெக்டர் சுட்டு கொலை: கொள்ளையன் நாதுராமின் கூட்டாளி கைது
x
தினத்தந்தி 15 Dec 2017 5:15 AM IST (Updated: 15 Dec 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், ராஜஸ்தான் போலீசாரின் தேடுதல் வேட்டையில் பயங்கர கொள்ளையன் நாதுராமின் நெருங்கிய கூட்டாளி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள ஒரு நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8–ந்தேதி அன்று ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், போலீஸ் ஏட்டுகள் எம்புரோஸ், குருமூர்த்தி, முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர். ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெயத்ரன் தாலுக்கா ராமாவாஸ் கிராமம் தான் பயங்கர கொள்ளையன் நாதுராமின் சொந்த ஊர் ஆகும்.

நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் கொள்ளையன் நாதுராம் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோர் தங்களுடன் வந்திருந்த 3 போலீசாருடன் கொள்ளையன் நாதுராம் பதுங்கி இருந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் அல்லாமல், தமிழகத்திலும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியை எடுத்து சுட்டது யார்? என்பதை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. முனிசேகரின் துப்பாக்கி என்றாலும், அந்த துப்பாக்கியால் சுட்டது யார்? என்பதில் குழப்பம் நிலவுகிறது.

ஆனால் சென்னை நகர உயர் போலீஸ் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியால் தான் சுட்டுள்ளனர் என்றும், சுட்டது கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தான் என்றும் கூறினார்கள். ஆனால் அந்த கொள்ளையன் யார்? என்பதை வெளியிடவில்லை.

சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், விசாரணை நடத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலம் சென்றுள்ள சென்னை இணை போலீஸ் கமி‌ஷனர் சந்தோஷ்குமார் நேற்று இரவு கூறியதாவது:–

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தை நான் நேரில் பார்வையிட்டேன். பெரிய பாண்டியனை சுட்டது யார்? என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பெரிய பாண்டியனின் உடலில் பாய்ந்த குண்டு வெளியேறி விட்டது. சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்து பார்த்ததில் அந்த குண்டு இன்னும் கிடைக்கவில்லை.

சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் கதாநாயக குற்றவாளிகள் நாதுராமும், அவரது நண்பர் தினேஷ் சவுத்ரியும் ஆவார்கள்.

இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் துப்பாக்கியால் சுட்டுகொல்லப்பட்ட வழக்கில் நாதுராம் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளார். தினேஷ்சவுத்ரி அதில் சம்பந்தப்படவில்லை.

அவரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வைத்து, அதிரடியாக ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள கடை ஒன்றில் திருட முயற்சித்தபோது, அவரை மடக்கிப்பிடித்துள்ளனர்.

கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தினேஷ் சவுத்ரியை நாங்களும் கைது செய்து சென்னை அழைத்து வருவோம். கொள்ளையன் நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள ஒருவரை பிடித்து ராஜஸ்தான் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விரைவில் நாதுராம் கைது செய்யப்படுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story