இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது


இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2017 4:00 AM IST (Updated: 16 Dec 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

சென்னை இன்ஸ்பெக்டர் ராஜஸ்தான் மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான கொள்ளையன் நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த கணவன்–மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை கொளத்தூர் மகாலட்சுமி ஜூவல்லர்ஸ் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரை கைது செய்வதற்காக சென்னையில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர், போலீஸ்காரர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி, சுதர்சன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 8–ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், ராமாவாஸ் என்ற கிராமத்தில் குற்றவாளிகள் நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோர் பதுங்கி இருப்பதாக சென்னை தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்களை சுற்றிவளைத்து பிடிக்கச் சென்றபோது, சென்னை தனிப்படை போலீசார் மீது பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனையும், அவருடன் சென்ற இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் 3 போலீசாரையும் நாதுராமும், அவரது உறவினர்களும் கும்பலாக சேர்ந்து கற்களை வீசி தாக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சென்னையில் இருந்து இணை போலீஸ் கமி‌ஷனர் சந்தோஷ்குமார் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெயத்ரன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்பெக்டரை சுட்டுக் கொன்ற வழக்கில் நாதுராமையும், அவரது கூட்டாளி தினேஷ் சவுத்ரி மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்களையும் ராஜஸ்தான் மாநில போலீசார் தேடிவந்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு தினேஷ் சவுத்ரி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அவர் போலீசாரிடம் கூறியதாவது:–

நாதுராமிடம், நான் கூலிக்கு தான் வேலை பார்த்தேன். அவர் கொள்ளையடிக்க செல்லும் இடங்களுக்கு என்னை துணையாக அழைத்துச் செல்வார். கொள்ளை முடிந்தவுடன் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை எனக்கு கூலியாக கொடுப்பார். என்னைப்போல் கொள்ளையடிப்பதற்கென்றே அவரிடம் ஏராளமான கூலி ஆட்கள் உள்ளனர்.

இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டபோது நான் அங்கு இல்லை. நான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடை ஒன்றில் திருடுவதற்காக வந்துவிட்டேன். நாதுராம் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர். அவர் 7 செல்போன் சிம் கார்டுகள் வைத்துள்ளார். அந்த சிம் கார்டுகளை மாற்றி, மாற்றி பயன்படுத்துவார்.

நாதுராமை பிடிப்பது கஷ்டம். அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தப்பி ஓடியிருப்பார். நான் சென்னையில் மணலி உள்ளிட்ட சில இடங்களில் நாதுராமுடன் சென்று கொள்ளையடித்து இருக்கிறேன். கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கும் சென்று கொள்ளையடித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

நாதுராம் பதுங்கி இருப்பதற்கு தேஜாராம் என்ற செங்கல்சூளை அதிபர் அடைக்கலம் கொடுத்துள்ளார். சென்னை போலீசார் நாதுராமை சுற்றிவளைத்தபோது தேஜாராம் தான் கும்பலை திரட்டி வந்து கல்வீசி தாக்கியதாக தெரியவந்தது.

இதன்பேரில் நேற்று தேஜாராமையும், அவருக்கு துணையாக செயல்பட்ட அவரது மனைவி பிந்தியா மற்றும் அவரது 2 மகள்களையும் ராஜஸ்தான் மாநில போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடக்கிறது. தப்பி ஓடிய நாதுராமை பிடிக்க தொடர்ந்து ராஜஸ்தான் மாநில போலீசார் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story