பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: மத்திய–மாநில அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை: மத்திய–மாநில அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Dec 2017 4:15 AM IST (Updated: 17 Dec 2017 3:14 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரிக்க காரணம் என்ன? என்பது குறித்து மத்திய–மாநில அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியில் கடந்த ஆண்டு, மனநலம் குன்றிய 60 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கிருபாகரன் தள்ளுபடி செய்தார்.

மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–

பாலியல் வன்கொடுமையை தடுக்க பல்வேறு கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும் பெண்கள் மீதான வன்கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இதற்கான காரணங்களை கண்டறிந்து குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே, பெண்கள் பாதுகாப்பு குறித்த கீழ்கண்ட கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசு அடுத்த மாதம் (ஜனவரி) 10–ந் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அந்த கேள்விகள் வருமாறு:–

1. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பெருக காரணம் என்ன?

2. இதுதொடர்பான புகாரில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை எதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்கிறது?

3. உடுமலை சங்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க கண்காணிப்பு கேமரா உதவியாக இருந்ததுபோன்று, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை மத்திய–மாநில அரசு ஏன் பொருத்தக்கூடாது?

4. பாலியல் கொடுமைகளில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு தரப்பில் ஆலோசனை, ஆதரவு, நிவாரணம் வழங்கப்படுகிறதா?

5. பெண்கள் மீதான பெரும்பாலான குற்றங்கள் வெளிவருவது இல்லை என்பது உண்மையா?

6. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு மதுவும் காரணமா?

7. இணையதளம், ஸ்மார்ட் போன்களில் ஆபாசம் தொடர்பான தகவல்கள் கிடைப்பதும் இந்த குற்றங்களுக்கு காரணமா?

8. திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் வரும் பாலியல் தொடர்பான காட்சிகள் தான் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பாலியல் வேட்கையை தூண்டுகிறதா?

9. வயதுக்கேற்ற பாலியல் கல்வியை வழங்கும் பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்த மத்திய–மாநில அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?

10. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது குறித்து மத்திய–மாநில அரசு ஏன் அதிக அளவில் விளம்பரப்படுத்தக்கூடாது?

11. பெண்களை மதிக்க வேண்டும் என்பது குறித்து திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் மூலமும், குறும்படங்கள் மூலமும் ஏன் அறிவுரை வழங்கக்கூடாது?

12. இந்த குற்றங்களுக்கான காரணங்களை கண்டறிவதற்கும், சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்கும் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு ஏன் ஏற்படுத்தக்கூடாது?

13. இதுபோன்ற கொடுமைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்களை ஏன் வழங்கக்கூடாது?

இவை உள்பட 25 கேள்விகளை நீதிபதி கேட்டுள்ளார்.

மேலும் நீதிபதி தனது உத்தரவில், ‘பாரதமாதாவே, உன் நிலத்தில் கயவர்களால் உனது மகள்கள் எப்படி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் பார்...இதுபோன்ற ஜென்மங்களை மனித இனம், மிருக இனம் எவற்றிலும் சேர்க்க முடியாது’ என்று தனது வேதனையை பதிவு செய்துள்ளார்.


Next Story