‘ஜனநாயகத்தின் வளர்ச்சியில் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்’ வெங்கையா நாயுடு பேச்சு


‘ஜனநாயகத்தின் வளர்ச்சியில் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்’ வெங்கையா நாயுடு பேச்சு
x
தினத்தந்தி 17 Jan 2018 10:15 PM GMT (Updated: 17 Jan 2018 9:52 PM GMT)

ஜனநாயகத்தின் வளர்ச்சியில் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை,

இந்திய அதிகாரிகள் சங்கத்தின் 110-வது ஆண்டு விழா மற்றும் மாநாடு ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு, சங்கத்தின் தலைவர் மூ.ராசாராம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஆர்.சுடலைக்கண்ணன், துணைத்தலைவர்கள் எஸ்.எஸ்.ஜவஹர், ஏ.ஆர்.செல்வக்குமார் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மேலாண்மை நிலையத்தின் தலைவர் கவிதா சித்துரி ஆகியோர் கலந்துகொண்டனர். மாநாட்டில், சென்னை மேலாண்மை சங்கத்தின் புதிய கட்டிடத்தை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

ஜனநாயகத்தின் வளர்ச்சியில் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அரசின் எந்த துறையாக இருந்தாலும் அவர்களின் பங்கு மிக முக்கியமானது. மக்களின் நலன் சார்ந்த சட்டங்களை அரசு இயற்றினாலும், புதிய திட்டங்களை தீட்டினாலும் அதன் முழு பலனும் மக்களுக்கு சென்றடைவதில் அதிகாரிகளின் பங்கு மிகவும் முக்கியமானது, அத்தியாவசியமானது ஆகும்.

கிராமங்கள் மீது கவனம்...

மக்கள் பயன்பெறக்கூடிய புதிய திட்டங்களை அரசின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒவ்வொரு மாநிலமும் வளம் பெறும்.

மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப மத்திய அரசும் நிதி வழங்கும். முக்கியமாக அதிகாரிகள் நகரங்களை விட கிராமங்கள் மீது அதிக கவனம் செலுத்தவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் தங்களுடைய தாய் மொழி மிகவும் முக்கியமானது. தாயிடம், தந்தையிடம், சகோதரனிடம், சகோதரியிடம், பக்கத்து வீட்டுக்காரரிடம் தாய் மொழியை பேசுங்கள். பிற மொழிகளை கற்றுக்கொள்வதிலும் ஆர்வம் செலுத்துங்கள். தமிழர்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அண்டை மாநில மொழிகளையும், இந்தியையும் கற்றுக்கொள்ளுங்கள். அதில் தவறு எதுவும் இல்லை. எந்த மொழியும் தாழ்வானது இல்லை. ஆனால் இந்திக்கு மட்டும் எதற்காக எதிர்ப்பு கிளம்புகிறது என்று எனக்கு புரியவில்லை?

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story