பிளஸ்-2 தேர்வு முடிவு மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு


பிளஸ்-2 தேர்வு முடிவு மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 16 May 2018 12:00 AM GMT (Updated: 15 May 2018 10:33 PM GMT)

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

சென்னை,

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளங்கள் ( www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in) மூலம் தெரிந்துகொள்ளலாம்.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

21-ந் தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 21-ந் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு அடுத்த(ஜூன்) மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இவ்வாறு தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அதேநேரத்தில், மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காகவோ சில மாணவர்கள் தவறான முடிவு எடுக்ககூடாது.தவறான முடிவுகளை மேற்கொள்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மனசோர்வுடன் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு மன சோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய உடனடி தகவல் மையம் (ஹெல்ப் லைன்) பள்ளிக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ இம்மையத்தை 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற மனநல வல்லுநர்கள் இம்மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளன்று பெற்றோர்கள் கவனத்துடன் இருந்து மன சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து அரவணைக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story